‘....முள்ளு முனையில மூணு குளம் வெட்டி வச்சேன்; ரெண்டு குளம் பாழு, ஒண்ணுல தண்ணியே இல்லே. தண்ணியில்லா குளத்துல மண்ணெடுத்தான் மூணுபேரு; அதுல ரெண்டு பேரு மொண்டி, ஒருத்தனுக்கு கையே இல்லை. கையில்லா குயவன் மணைஞ்ச சட்டி மூணு சட்டி; அதுல ரெண்டு சட்டி ஒட்டை. இன்னொன்று...!’ என்று நீளும் பழங்கால ஒரு நாடோடிப் பாடல் உண்டு. லாஜிக்காக யோசித்தால் இதில் அர்த்தம் இல்லைதான். அதில் சிறகுகள் விரிக்கும் கற்பனா விநோதங்கள் இருக்கிறதே! அந்த மரம் 100 அடி உயரம் என்பது விஞ்ஞானம்; அந்த மரம் வானாளாவியது என்று மிகைப்படுத்தி நிற்பது அழகியல் பதத்திற்குள் அடங்கும் இலக்கியம். இந்த மரபு வழியில் நாடோடிப்பாடல்கள் போலவே மண் மணக்கும் மொழியில், மூத்தோர் வாழ்நிலையை கருத்தியல் கலக்காது, கலவையியல் கலக்கிப்பார்த்தால் சிதறுண்டு நிற்கும் சுவையும் மணமும் இருக்கிறதே! அது இலக்கிய ரசத்தில் மட்டுமே கிடைக்கிறது.
‘பொல்லாத கெடாவும்,
சில பூங்குட்டிகளும்...!
........................................................................................................ ................................................................................ ஜூலை 2013
அகண்ட மொகரை. முன் நெத்தியில் பெருவிரச்சோடு பொடப்பு. தாடையில
கூமாச்சியா தொங்கும் தாடி. தும்பைப்பூ நெறம். ஆனாலும் செம்புழுதியிலும், சாக்கடை தண்ணியிலும்
பொறண்டு, பொறண்டு எழுந்ததனால் சிக்கு சிக்காகிக் கிடக்கும் அழுக்கு முடி. அதுல அங்கங்கெ ஒட்டிகிட்டுக் கெடக்கும் ஆட்டாம் புழுக்கைகள்.
‘பெரிய கெடா’ பட்டிக்கு வரும்போது அதும்மோட அம்மாகிட்ட
பால்குடி மறக்காத மூணுமாச குட்டி. அப்பவே நாலு ஈத்து கண்ட லட்சுமிய பொடணியில் ஏறப் பார்த்தான்.
லட்சுமி சாமான்யமானதா என்ன? ஏறுன வேகத்துல
திரும்பி, ஓன்றரையடி உசரத்துக்கு எம்பி நின்னு ஒரே முட்டு. கிடா குட்டி, பூங்குட்டியாச்சே!
தலைகுப்பற உளுந்த குட்டியப் பார்த்து பதறிப் போனான் மொசுவன்.
துடியலூர் மாட்டுச் சந்தையில எழுபது சுத்து சுத்தி, வெள்ளக்கெணறு வியாபாரிகிட்ட நாலு மணிநேரம்
நாற்பது விசுக்கா பேரம் பேசி, எட்டுநூறு ரூவாய்க்கு வாங்கின குட்டி.
‘குடல் தனி, குண்டாமணி தனியா வந்துடுச்சு. இனி வளுவக் கூட்டி கூறு வைக்க வேண்டியதுதான்
பாக்கி!’ ன்னு சடுதியில் நெனச்சுட்டான்.
அந்த நெனப்பை திரும்ப யோசிக்கக் கூட நேரம்
இல்லை. என்ன அதிசயம்?
அந்த நெனப்பையே நிமிஷ நேரத்தில் கெடாசியது கெடா குட்டி. உழுந்த வேகத்துல பிடறி மசிரை சிலுத்துகிட்டு எழுந்திருச்சிது. எழுந்திரிச்ச வேகத்துல ‘மம்மாலையா!’ அந்தரத்துல பாய்ஞ்சுது பாரு.
முன்னங்கால்க ரெண்டும் நெலத்துயிருந்து ஆறடி உசரத்துல. பின்னங்கால்க ரெண்டும் காவடிக்
கால்க விரிஞ்சது கணக்கா புழுதியிலே இருந்து திக்காலுக்கொண்ணா மூணடிக்கும் மேல.
கண் அசைக்கிற நேரம் இல்லை. ஒரே முட்டு. செனையாட்டு நடு வயித்துல கொம்பை வச்சு ஒரே
தூக்கு.
லட்சுமிகிட்ட ‘ம்மே...’ன்னு ஒரு சத்தம்தான் கேட்டுச்சு. நாலடி
தூரம் துள்ளிப்போய் உழுந்தது.
அதுகிட்ட உசிரையே உட்டது கணக்காத்தான் கூப்பாடு. அது உழுந்த வேகத்தைப் பார்த்து முன்னை விட பதறீட்டான்
மொசுவன்.
அலறியடிச்சுட்டு ஓடினான். உழுந்து கிடந்த லட்சுமியை அலேக்கா தூக்கினான்.
அதுக்குள்ளே வால் பக்கமாக புழுக்கைகளை வெளித் தள்ளி, ஒரு முழ நீளத்துக்கு வயிறெடுத்துக் கிடந்தது லட்சுமி.
“அடங்கொப்பந்தண்ணாணேணான்னா...!”
மொசுவன் பதற்றம். பரிதவிப்பானது. தோள்மேல்
நழுவிய கறுப்பு போர்வையை வேகமாக ஒரட்டாங் கையால இழுத்து உட்டுட்டான். அதைவிட வேகமாய் தன் வலக்கையில் இருந்த
தடியால் கிடா குட்டியின் நடுமுதுகில் வச்சான்
ஓர் அடி.
‘ப்பே...!’ பலமாய் அடிபட்டு, நாயை விட வேகமாய்
கத்திக் கொண்டு ஓடியது கெடா.
என்ன சாமி புண்ணியமோ, அதற்குள்ளே கீழே உழுந்து கிடந்த லட்சுமி எழுந்திருச்சுடுச்சு.
‘நிமிச நேரத்துல என்னை பதற வச்சுட்டியேடி லட்சுமி!’
லட்சுமி கண்ணுலயே நெறஞ்சு நிக்கற பயம். அதே சூட்டோட அந்தப் பக்கமா குட்டிகளோட குட்டியா ஓடிப்போய் நின்ன கெடா குட்டியையே விரச்சு,விரச்சுப் பாக்குது.
அதுமோட கண்ணுல அப்படியொரு பயத்தை பார்த்ததேயில்லை. அதுக்கப்புறம்தான் மொசுவன் கெடா குட்டியை கவனித்தான்.
எட்டு வயசுல பட்டி போட்டு குட்டிகளை வளர்த்துன இந்த அறுபது வயசு அனுபவத்துல எத்தனையோ கெடா குட்டிகளை பார்த்திருக்கான்.
பட்டியில இருந்த முப்பது மூட்டுக் குட்டிகளை ஒத்தைக் கெடாவா சமாளிச்சு, ஆறு மாசத்துக்கு
ஒருவாட்டி ஒவ்வொரு ஈத்துலயும் நாலஞ்சு குட்டி
ஈன வச்ச கரியங் காட்டுவலசு கராச்சி கெடா கூட மூணுமாசப் பருவத்துல இந்த சலம்பல் செஞ்சதில்லை. ஆனா இது போடுன்னா போடு, அப்படியொரு போடு... அது நாளாக,
ஆக பட்டவர்த்தமா ரெதிய ஆரம்பிச்சுது.
அந்த சங்கதிக்குப் பொறகு லட்சுமி அந்த பொல்லாத கெடா குட்டிக்கு பக்கத்துல
நிக்கவும் வேணுமே! அதக் கண்டாலே ஓட்டந்தான்.
ஆனா பொல்லாத கெடா அடங்கணுமே. லட்சுமி குட்டியின்னு இல்லே. எந்தக்குட்டி கெடச்சாலும்
ஒரே அமுக்கு. ஒரே ஏறு. எண்ணி நாலுநாள்ல பலன் பட்டுடும். ‘ஆமாறி’க் குட்டியானாலும் ஆறு மாசத்துல நாலஞ்சு குட்டிக போடலேண்னாத்தான் பெரிய ஆச்சர்யம்.
லட்சுமியுங்கூட அடுத்ததா இது மிதிச்சதுலதான்
செனைப்பட்டுது. அதுவும் எப்படி? அதுக்கு முன்னாடி எத்தனை கெடாவை விட்டாலும் ரெண்டு குட்டிக்கு மேல போட்டதில்லை.
இது மிதிச்ச பின்னால ஒரு ஈத்துக்கு நாலு குட்டிதான்.
அதுவும் ஆறுமாசத்துக்கு ஒரு நா தவறாம ஈத்தெடுக்கும். இதே மாதிரிதான் மத்த மூட்டுக்
குட்டிகளின் நெலமையும்.
பத்தாடு இருந்த பட்டி. ரெண்டே வருசத்துல
நூறு ஆடா பெருகிடுச்சு. அது பொறம்பா ஒரு நூறு ஆடு துடியலுார் சந்தையிலும், அம்பது ஆடு முனியன் கசாப்புக் கடைக்கும் வித்திருப்பா அங்காத்தா.
‘எள வயசுலயே அடங்க மாட்டாத பிசாசு. ஒண்ணு பட்டியை நாசம் செய்யும். இல்லே நாலு குட்டியையாவது
நசுக்கிக் கொல்லும். முதல்ல காயை குறுகப் புடிச்சு ஒடைத்தட்டி உடு. இல்லே கசாப்புல கொண்டு போய் தள்ளு!’ன்னு
ஆரம்பத்துல அவ சொல்லாத நாளில்லை.
இத சொன்ன மொத நாள்லயே அதுக்கு அவ வார்த்தையில என்ன வௌங்கிச்சோ.
துாரமா நின்ன கெடா. எம்பிக் குதிச்சு
இவகிட்ட ஓடி வந்தது. எகிறி நின்னு அவ ‘குடுகுல’ ‘நங்க்’ ன்னு ஒரே முட்டு.
தலைகுப்புற உளுந்தா அங்காத்தா. அவ, கண்ணுல பிதுப்பிதுன்னு தண்ணி. ‘அஸ்ஸூ, புஸ்ஸூ’ன்னு அப்ப அவ உட்ட பெரு மூச்சு இருக்கே. நாலு
செனை மலம்பாம்புக தோத்துடும்.
குடுக அழுந்தத் தேய்ச்சுட்டு எந்திரிச்ச வேகத்துல தாவாரத்தோரமா வச்சிருந்த வேல் கம்பை எடுத்தா. பொல்லா
கெடா நடு முதுகுல வச்சா ஒரு சாத்து. அப்பவாவது அது பயந்தோடுச்சான்னா அதுதான் இல்லே.
மசிரை சிலித்துட்டு திரும்பி நின்னு கொணச்சுட்டு அவ மேலேயே எகிறிடுச்சு.
“ஆமாண்டா, வா... ஊர்லயிருக்கிற அத்தனை கடுவம் பயல்களும் என்னை பெண்டாளப் பார்த்து ஒண்ணும் முடியல. கட்டினவனாலயும்
வயித்துல பூச்சி புழு வைக்கிறதுக்கு வக்கில்லே. இனி நீ ஆட்டுப் புருஷன் வந்துதான் ஆட்டுப் புள்ளையை கொடுப்பே போலயிருக்கு!”
குத்தல் பேச்சு. நெறஞ்ச எகத்தாளம். சும்மாவே தனக்கு புள்ளையில்லாததை தொண,தொணக்கும் தேவி. குட்டிக்
கெடா இப்படிப் போனா சும்மாயிருப்பாளா?
“எம் மேலே தடத்துல போறவன் எறினாலும், ஆட்டுக்
கெடா ஏறினாலும் ‘அங்கெ’ ஒண்ணும் சோதிக்காது. போடா பொக்கத்த ஆடே!” கடைக் கண்ணால அவ மொசுவனை
பார்த்துட்டு பசாரிச்ச பசாரிப்பு.
மறுபடியும் ஆட்டுக் கெடாவுக்கு வச்சா சாத்து. மொசுவனுக்கு வச்சது போலயிருந்தது.
மொதக்குடி தங்காத்தா அஞ்சாவது புள்ளையக் கையில
கொடுத்துட்டு கண்ணை மூடினப்பவே நம்ம ‘கட்டீட்டு’ இருந்துருக்கணும். அதை உட்டுட்டு, சின்னஞ் சிறுசுகளை கவனிக்க ஆயா வேணும்ன்னு வேலாத்தாளை புளியம்பட்டியிலிருந்து செரையெடுத்து வந்தான்.
அந்தக் காலத்துலயே பத்தாயிரம் பணமும், நாலு குதிரு நெல்லும் பரிசமா அவ அப்பனுக்கு
கொடுத்தான். அவ சங்கதியில அதுவே பெரும் குத்தமா போச்சு.
“நாலு காசுக்கு ஆசைப்பட்டு நாறப்பயலுக்கு
கொடுத்து எம்மட வாழ்க்கையவே கெடுத்துட்டானே என் அப்பன். அவன் வௌங்குவானா? அவன் குடி
தழைக்குமா?”
வேலாத்தா வக்கனை பேசும் போதெல்லாம் மொசுவன்கிட்ட உழும் சாத்து. கையில் எது கெடச்சாலும்
அதுலேயே வச்சு சாத்துவான். சின்ன கேவலோட அடங்கிப் போயிடுவா. அப்ப இவன் ஒடம்புல நல்ல வளுவிருந்தது. அவளுக்கும் நாலு புள்ளை பொறந்தது. அப்பவும் அடங்காத
ஆம்பளைத்தனம்.
தெற்கால ஊர்ல பட்டிபோட்டப்ப, பண்ணை வேலைக்கு வந்த அத்தனை பொட்டச்சிகளோடவும் ஆராட்டம். அதுல ஒருத்திக்கு நாலஞ்சு
புள்ளைக மொசுவன் சாயல்லயே பொறக்க அவ புருஷன் ஒரு நா கையுங் களவுமா புடிச்சுட்டான்.
வளுவு கூடி அடின்னா அடி. அப்படி ஒரு அடி!
‘ஊட்டுல மலை மாடு கணக்கா பொண்டாட்டிய எங்க பொம்பளைக மேல கை வச்சிருக்கானே ஆத்தா. நீங்க என்னதான் செய்யறீங்க?’
அப்படி ஒரு சுடு பேச்சு பேசினதும் துடிச்சுப் போனா வேலாத்தா.
‘உனக்கு நா என்னத்துல கொறை வச்சேன். உங்கறதுல கொறையா? உடுத்தறதுல கொறையா? கூப்பிட்ட
கொரலுக்கு ஓடீ வந்து பாய் விரிச்சு கிடந்ததுல கொறையா?’
மூக்கால அழுது மேக்க தலை வச்சு படுத்தவ அடுத்த நாளே நாண்டுகிட்டு செத்துட்டா.
ஒண்ணுக்கு ஒன்பதுன்னு தலையெடுத்த பசங்க. கொதிச்சுட்டாங்க. நாலஞ்சு ராத்திரி ஊருக்கு
வெளிய ஒதுக்கலாயிருந்த சாளைக்குள்ளே வச்சு தர்ம சாத்து.
“நீயெல்லாம் ஒரு அப்பனடா... தறுதலை நாயே!”
அதுக்கப்புறம் பட்டி மேய்க்க மட்டுந்தான்
போட்டாங்க மக்கமாருக. ஊர் ஊரா போகணும். குட்டிகளை மேய்க்கணும். பட்டி போடணும். அதுக்கேத்தாப்பல
பருவக்குட்டிகளும் கெடச்சுது.
எல்லாருமே மொசுவன்கிட்ட எதை அனுபவிச்சுட்டுப் போனாங்களோ. அதை அனுபவிக்கத்தான் அங்காத்தாளும்
வந்தாள். ஆனா அது நடக்கலை. எல்லோருக்கும் தாராளமா நடந்தது. இவளுக்கு மட்டும் ஏன் நடக்கலை?
அதுதான் மொசுவனுக்கும் விளங்கல. அவ மொசுவங்கிட்ட வரும்போதே படு வேகத்தோடதான் வந்தா.
“நீ என்ன பெரிய இவனாமா? எப்பேற்பட்டவளையும் உழ வச்சிருவியாமா... என் சோட்டு பொட்டச்சிக சொல்றாளுக... கடுப்பேத்தறாளுக...
அதையும்தான் செய்.. பார்ப்போம்!”
அவ கேட்ட கேள்வி. சோதா பயல்களையும் உசுப்பேத்திடும். நித்தம் ஒரு பிறை கண்ட மொசுவனை
சும்மா விடுமா? அவ மேல முரட்டுக் கெடா கணக்காத்தான் பாய்ஞ்சான். இவ என்ன செஞ்சும் அவ
மரங்கணக்கா கெடந்தா.
ஒரு ராத்திரி, ரெண்டு ராத்திரி. ‘ம்கூம்...!’ என்ன ஆச்சு எனக்கு? அவ மலை மாடு கணக்கா
கெடக்க, இவனும் அப்படி இப்படி உருண்டு பார்க்க...எப்பவும், எதுலயும் ஒண்ணும் முடியல...!
அப்படி கெடந்தப்ப ஒரு நா, பட்டியைச் சுத்தியும் தீப்பந்த வெளிச்சம். இவங்க அள்ளிச்
செருகிட்டு எழுந்திருக்கறதுக்குள்ளே அத்தனை பேரும் சேர்ந்து அமுக்கீட்டாங்க.
“நட்ட நடு காட்டுல ... நம்ம புள்ளை கூட... நீயெல்லாம் ஊர் உட்டு ஊர் வந்து பொழைக்கிறவனா? ‘த்தூ’ நாயே!” காறி உமிழாத நாற வாய்கள் இல்லை. சமாச்சாரம் கிடைத்து ஊர்லயிருந்து பசங்க
வந்தாங்க.
‘இந்த கேடு கெட்ட கெழவன் இன்னமும் திருந்தலையா?
அவன் திருந்தற மாதிரி ஒரு தண்டணை கொடுங்க. இதுக்கப்புறம் இந்தப் பய எந்த பொம்பளையையும்
திரும்பிப் பார்க்கக் கூடாது!’
அதுக்கு ஒத்தூதறது போல் அவங்க சனங்க ஒரு தாக்கீது வச்சாங்க.
‘அப்பன், ஆத்தா இல்லாத புள்ளை இவளை இனிமே யார் கட்டிக்குவா? இந்த ஆட்டுக்காரனே கட்டிக்க வேணும்!’
நாடி எந்திரிச்சு வெளையாடின காலத்துல எல்லாம் கெடைக்காத கட்டை. இனிமே வந்து என்ன
செய்யப் போவுதோ? எந்த சங்கதிக்கு மொசுவன் பயப்படாத
காளையா நின்னானோ...
அந்த விஷயத்துக்கு கலங்கி நின்ன வேளையில்தான் அங்காத்தா இவன்கிட்ட வாழ்க்கைப் பட்டா.
இல்லே, வாழ்க்கை கெட்டாள்ன்னுதான் சொல்லணும்.
அதுக்கப்புறம் மொசுவன் பப்பு அவளிடம்
வேகவேயில்லை. அந்த ஏலாமையில் மொணக ஆரம்பிச்சான் மொசுவன். ஏதாச்சும் ஆம்பளைன்னு ஒருத்தன்
வூட்டுக்கு வந்துட்டா போச்சு. அவனுக கூட அவ சிரிச்சுப் பேசினா போதும் வேற வினையே வேண்டாம்.
நெஞ்சுக்குழிக்குள்ளே பதட்டம் ஆரம்பிச்சுடும்.
அதுலயும் துடியலூர் சந்தைக்காரனுகளும்,
கசாப்புக்கடை ரங்கன் பசங்களும் வூட்டுக்கு குட்டி புடிக்க வரும்போது மனசுக்குள்ளே ‘கருக்,
வெருக்’ன்னு இருக்கும்.
கன்னாலங் கட்டி வருஷம் நாலு முடிஞ்சும் தள, தளன்னு கட்டுக் கொளையாம இருக்கற அங்காத்தா.
பெரிய கெடாகிட்ட நம்ம பட்டி மூட்டுக்குட்டிகன்னு இல்லாம வெளியாளுக குட்டிகளுக்கும்
ஒரு சலக்கா உடறதுக்கு ரூபாய் அஞ்சு வாங்கீட்டு செனை சேத்துற அங்காத்தா. இடைவெளியில எங்காவுது சோரம் போயிட்டா?
ஒரு சலக்கா பயந்தது கணக்காவே ஆகிப்போச்சு. எளங்குட்டிக்கு செனை சேத்த வந்த கொக்காளி
தோட்டம் கோணவாய் நாராயணன். அங்காத்தா இடுப்புல படக்கூடாத எடத்துல கை வச்சுட்டான். கிழவனுக்கு
படுக்கைய தந்தவ நமக்கு மசிய மாட்டாளாங்கற நெனப்பு.
அப்ப, ருத்ரகாளி ஆகிப்போனா அங்காத்தா. உட்டா ஒரு உதை. உயிர்
நிலையிலயே உதைச்சுட்டா போல. அவன் கத்தீட்டு ஓடினது ஊரைத் தூக்கியது. மொசுவன் அப்போத்தான்
குட்டிகளை ஓட்டீட்டு வந்து பட்டியில் அடைச்சுட்டு இருந்தான். என்னவோ ஏதோன்ன்னு ஊட்டுக்குள்ளே
ஓடிப் பார்த்தப்ப, நடு ஊட்டுல
குத்தவச்சு உக்காந்துட்டு குமுறீட்டு இருந்தா.
“எசவா பொம்பளை கெடச்சா வப்பாட்டி ஆக்கிக்கலாம்ன்னு நெனைக்குதுக எச்சக்கல நாய்க. அதுக்கு இந்த அங்காத்தா
ஒண்ணும் ஆள்காரியில்ல. அந்த ‘அவுசேரி’ பொழப்பு பொழக்கறதுக்கு நாலு முழக் கயித்துல நாண்டுகிட்டு
சாவேன்!”
அவ போட்ட கூப்பாட்டு மொசுவனுக்கு நெஞ்சில் பால் வார்த்தது. எங்கெயோ எடறின எடறல்.
அங்காத்தா ‘அந்த சங்கதி’யில் நெருப்பு மாதிரின்னு நிரூபிச்சிட்டா.
ஊர்க் கொமறி புள்ளைகளுக்கெல்லாம் படம் காட்டின நமக்கே கடுக்கா கொடுத்தவ. இந்த பயலுகளுக்கா
மசிவா?’
இதுக்கெல்லாம் காரணம் இந்த பொல்லா கெடாதான்னு
மாயாத கோபம். அதைக் காயடிக்கவும் துணிஞ்சான்
மொசுவன்.
முன்னங்கால்க, பின்னங்கால்க, ரெண்டையும் தனித்தனியா தாம்புக் கயித்தால கட்டினான். அப்பால நாலு காலையும்
சேத்து உருவாஞ் சுருக்கு போட்டுட்டான். கெடா நடு நெஞ்சுல முட்டிங்காலை நேக்கா வச்சுட்டு
சப்பட்டை கல் ஒண்ணு எடுத்து ‘அதுக்கு’ அடியிலயும் வச்சுட்டான். குழவிக் கல்லையும் ‘நேரா’ ஓங்கீட்டான்.
நாலு ராத்தல் எடைக்கும் கொறையாத ‘காய்’. வாக்கனத்துல போட்டு வதக்கினா ஒரு குண்டா
ஆகும். நினப்புலயே எச்சி ஊறுது. விதை நரம்பு பொடைச்சு ரத்த ஒட்டந் தெரியுது.
பொல்லா கெடா கழுத்த திருப்பீட்டு கண்ணு பிதுங்கறது கணக்கா பாக்குது. அதும்போட பார்வையில்
அப்படியொரு கிலியை அதுக்கும் முன்னால பார்த்ததேயில்லை.
அப்படியிப்படி ஒடம்பை முறுக்குது. நாக்கை துருத்தீட்டு ஈனஸ்வரத்துல கத்தி விறைக்குது.
‘என்கிட்ட இருக்கற சந்தோஷம் ஒண்ணே ஒண்ணு. அதையும்
பறிக்கிறியே?’ன்னு
அது வாயிருந்தா கத்தியிருக்கும். நெனைக்கும்போது சங்கடமாத்தான் இருந்துச்சு.
‘இதையெல்லாம் பார்த்தா வேலையாகுமா? ஓங்கின கையை மேலே, மேலே தூக்கினான். அடுத்த
நிமிஷம் காய் கச,கசன்னு நசுங்க வேண்டியதுதான்
தாமசம். அதுக்குள்ளே...
இவன் குடுகுல விழுந்தது ஓர் உதை. தான் தலைகுப்பற விழுந்ததும், ஓங்கின குழவிக் கல் பட்டி மூலையில் விழுந்ததும்தான் மொசுவனுக்கு தெரியும்.
கண்ணுல பொறி பறக்க புரண்டு நிமிர்ந்து பார்த்தான். அங்கே காளியாத்தா கணக்கா கண்ணு முழி
பிதுங்க நின்னுட்டருந்தா அங்காத்தா.
“என்ன காரியம்ய்யா செய்யத் துணிஞ்சே? பட்டி
பெருக்கத்துக்கே உசிர் நாடி. குடும்பத்துக்கே அந்த மாரியாத்தா கொடுத்த கொடை. அது இல்லாட்டி
போனா நீயும் நானும் சோத்துக்கே டிங்கியடிக்கோணும்!”
அவ என்னன்னமோ பேசறா...மொசுவனுக்கு அப்போதைக்கு ஒண்ணுமே விளங்கல. தன்னை அந்த உதை, உதைச்சதே அங்காத்தாதான்னு தெரியவே ரொம்ப நேரம் ஆகிப்போச்சு. கண்ணுல பிது,பிதுன்னு
தண்ணி... பிதுர் புடிச்சவன் கணக்கா மூலையில குக்கீட்டான்.
இவன் பெரக்கட தப்பினவன் கணக்கா கெடந்த நேரத்துல, அவளோ கெடாவோட கால் கட்டையெல்லாம்
அவுத்து உட்டா. சவக்கலை தட்டிக்கெடந்த கெடா. இவ ஒர் எத்து உட்டதும், உட்டா போதும்ங்கறது
கணக்கா ஓடுச்சு.
அதுக்கப்புறம் என்ன வந்துச்சோ? பெரிய கெடாவோட
குறும்பு அத்தனையும் சப்பசாடா அடங்கிப் போச்சு.
அங்காத்தாளுக்கும் என்ன தோணுச்சோ? சாடை பேசறதும், எகத்தாளம் பேசறதையும் சுத்தமா
நிறுத்தீட்டா. பலம்(ன்)பட சொக்கி நிக்கிற எளந்தாரி மூட்டுக்குட்டிய கொண்டு போய் நிறுத்தினாலும் பெரிய கெடா
நாலடி தள்ளி நிக்குமே ஒழிய கிட்ட போகாது. மிரள, மிரள மொசுவனையும் பாக்கும். அங்காத்தாளையும் பாக்கும்.
‘சும்மா தைரியமா போடா!’ன்னு நேக்கு, போக்கா தாஜா பண்ணினாலும் பின்னங்கால்களை பின்னாலேயே நகர்த்தி திரும்பி
ஓடறதையே வழக்கமாக்கிடுச்சு.
நாலஞ்சு மாசம். மத்த கெடாய்க இருந்தாலும்
பெரியாடு சேட்டையத்து போனதால பட்டிப் பெருக்கம் கொறஞ்சுடுச்சு. மொசுவனுக்கு முன்னால
மொகஞ் சோர்ந்து போனது என்னவோ அங்காத்தாதான்.
‘எல்லாம் உன்னால வந்தது. பயமத்து திரிஞ்ச
கெடாய காயடிக்க பார்த்தியே. அதுலதான் அது பேயறைஞ்ச மாதிரி ஆகிப்போச்சு!’ என்றாள் அங்கலாய்ப்புடன்.
‘நீ மட்டும் என்னவாம்? ஊரெல்லாம் மேய்ஞ்சு
அடங்காம திரிஞ்ச காளைய ஒத்தை வார்த்தை சவால் போட்டு வாலைச் சுருட்ட வக்கல?’ என்று பதிலுக்கு
கேட்டான் வெடுக்கென்று.
அதுக்கும் பின்னால அங்காத்தா மனசுக்குள்ளே
என்ன நெனச்சுகிட்டாளோ? ரொம்ப நேரம் ரோசனையிலேயே இருந்தாள். ஒரு நாள் ரெண்டு நா இல்லே பல நாள் அப்படியேதான்...!
ஒரு நா சாயங்காலம்... வெ(வி)ளக்கு வச்ச நேரத்துல பட்டி
அடைச்சுட்டு ஊட்டுக்குள்ளே நொளஞ்சான் மொசுவன். அதிசயமா சீவி சிங்காரிச்சுட்டு அவனை
எதிர்பார்த்து குக்கீட்டு இருந்த அங்காத்தா
வாஞ்சையோட சொன்னாள்:
“அம்பராம்பாளையம் கருப்பராயன் கோயில்ல
எப்பேற்பட்ட காத்துக் கருப்பு புடிச்சிருந்தாலும் வெலகி ஓடறதுக்காக செவ்வாய்க் கிழமை
திருநீரு, கயிறு மந்திரிச்சு தர்றாங்களாம். வாங்கிட்டு வந்து பெரிய கெடாவுக்கு கட்டு.
எங்கம்மா சொல்லிவிட்டா”
மொசுவன் அவளையே உத்துப் பார்த்தான்.
“என்னய்யா பாக்கறே? கெடாவுக்கு மட்டுமில்லே, உனக்கும்தான் பண்டுதம். நட போலாம்!”
அடுத்த வருஷம். ஏது நடந்ததோ? எப்படி நடந்ததோ?தெரியலை. மந்திரிச்ச தண்ணியில மனப்பயம் போச்சோ?
அதும்பேரால மருத்துவம் மன மருத்துவம் ஏதாச்சும் செஞ்சாங்களோ?
பெரிய கெடாவுக்கு துப்புறவா பயம் போயி
பட்டி பெருகி, வருமானமும் பெருக ஆரம்பிச்சிருந்தது.
அங்காத்தாவும் கக்கத்துல ஒரு ஆம்பளைப் புள்ளையை சுமந்திட்டிருந்தா. மொசுவன்தான்
அடங்க மாட்டாத சேவக்கோழி கணக்கா.... பட்டி ஓட்டிட்டு
போற பக்கம் இருந்து ஏதாவது ஒரு வம்பை பழையபடி கொண்டுட்டு வந்துட்டிருந்தான்.
*